Welcome !!!

ஜோதிடம் பற்றிய விழிப்புணர்வு


nirmathi gopalஇன்று ஜோதிடத்தை நம்புவதா, கூடாதா என்று மக்கள் குழம்பிப் போய் இருக்கிறார்கள். நம்புகின்றவர்கள், எந்த ஜோதிடர் கூறுவது சரி என்று நம்பவும் முடியாமல்,நம்பாமல் இருக்கவும் முடியாமல் தவிக்கிறார்கள். இவை அனைத்திற்கும் ஜோதிடர்களே காரணமே தவிர, மக்கள் அல்ல. சில பிரபல ஜோதிட மேதைகள் பெரும்பாடு பட்டு, இந்திய உச்ச நீதி மன்றம் வரை சென்று வாதாடி, ஜோதிடத்தை ஒரு அறிவியல் என்று நிரூபித்து அதை இன்று பல பல்கலைக்கழகங்களில் "முனைவர்" நிலை வரை பட்டப் படிப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

ஜோதிட சாஸ்திரத்தை முனிவர்களும், நமது முன்னோர்களும் அவர்களது ஞான திருஷ்டியினால் கண்டறிந்து, கோள்கள் பூமிக்கு அதிர்வுகளை ஏற்படுத்தும் போது அதிலுள்ள எல்லா பொருள்களுக்கும் அதன் பாதிப்பை தருவதையும் கண்டறிந்து கூறியிருக்கிறார்கள்

கோள்களுக்கும், பூமிக்கும் உள்ள இடைவெளிகளையும், கோள்களின் பாகைகளையும் அவர்களின் ஞான திருஷ்டியினால் கண்டறிந்து வாக்கு மூலம் அறிவித்து வந்தார்கள். ஆனால், காலப் போக்கில், இடைக்காலத்தில் தோன்றிய பல ஜோதிடர்கள், வான சாஸ்திர நிபுணர்கள், அவரவர்களுக்குத் தோன்றியதையெல்லாம் புகுத்தி, பல தரப்பட்ட வாக்கியப் பஞ்சாங்கங்களை வெளியிட்டு, ஜோதிடத்தையும், வான சாஸ்த்திரத்தையும் குழப்பி விட்டார்கள்.

இவையணைத்தையும் அறிவியல் மூலமாக நேர்படுத்த, பல தரப்பட்ட வான சாஸ்த்திர நிபுணர்களும், கணித மேதைகளும் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு ஒருங்கிணைந்து திருக்கணிதம் என்ற பஞ்சாங்கத்தை உருவாக்கினார்கள். "திருக்" என்றால் கண்ணால் பார்ப்பது என்று அர்த்தம். தொலை நோக்கிக் கருவிகளால் பார்த்து வானவியல் அறிவியல் கூடங்கள் தெரிவிக்கும் பாகைகளும், இந்தப் பஞ்சாங்கத்தில் குறிப்பிடுள்ள பாகைகளும் சரியாக இருக்கின்றன. ஆனால், இதனை இன்னும் பல பாரம்பரிய ஜோதிடர்கள் ஒப்புக்கொள்ள மறுக்கிறார்கள்.

ஒவ்வொரு நாடுகளிலும், ஒவ்வொரு விதமாக ஜோதிடக்கலை கடைபிடிக்கப்படுகிறது. ஆனால் அடிப்படையான பாகைகள் சரியாக கணிக்கப்படாவிட்டால், ஜாதகமும் தவறாகும், பலன்களும் தவறாகும்.

இந்த நிலையில், ஜோதிடர்கள் அனைவரும் ஜோதிட அறிவியலை ஒரு முகமாக பின்பற்றி, மக்களுக்கு வழிகாட்டிகளாக அமைய வேண்டும். ஒழுங்கான தியானப் பயிற்சிகள் மூலம் தங்கள் பலன் சொல்லும் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். மக்களும் ஜோதிடத்தையும், ஜோதிடர்களையும் மதித்து நல்வாழ்வு வாழ்வோமாக.